மும்பை, ஜூலை 20: மும்பை பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 15 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஐந்து வாரங்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
திங்கள்கிழமை வர்த்தகம் முடிவில் 446 புள்ளிகள் உயர்ந்ததைத் தொடர்ந்து குறியீட்டெண் 15,191 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 2.7 சதவீதம் குறியீட்டெண் உயர்ந்து 4,494 புள்ளிகளாக அதிகரித்தது.
ஓய்வூதியம், வங்கித்துறை சீர்திருத்தம் உள்பட 7 மசோதாக்கள் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை நிதித்துறைச் செயலர் அசோக் சாவ்லா கூறியதால் பங்குச் சந்தையில் 495 புள்ளிகள் உயர்ந்தது.
திங்கள்கிழமை அமெரிக்காவின் சிட்டி குழுமத்துக்கு தேவையான நிதி உதவியை அளிக்கப்போவதாக அமெரிக்க அரசு வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர்ந்தன.
ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இடையே எரிவாயு வழங்குவதில் நிலவும் பிரச்னையில் அரசு ஏன் தலையிடக் கூடாது என்றும் இந்த உத்தரவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் (கேஜி) எடுக்கப்படும் இயற்கை எரிவாயு அரசுக்குச் சொந்தமானது என்றாலும், இரு தனியார் நிறுவனங்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அரசு தலையிட முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அரசின் நிலையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தால் சந்தை விலைப்படிதான் எரிவாயுவை அனில் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டியிருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சாதகமான சூழலே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவியது.
இதனால் அந்நிறுவனப் பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்து ரூ. 2030.65-க்கு விற்பனையானது.
அதேசமயம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனப் பங்கு விலை 2.7 சதவீதம் சரிந்து ரூ. 80.75-க்கு விற்பனையானது. இதேபோல அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்கு 1.2 சதவீதம் சரிந்து ரூ. 1,135.85-க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.1 சதவீதம் சரிந்து ரூ. 270-க்கும் விற்பனையானது.
வங்கிகளின் பங்கு விலைகள் கணிசமாக அதிகரித்தது. இதேபோல தகவல் தொழில்நுட்ப பங்கு விலைகளின் உயர்வும் பங்குச் சந்தை குறியீட்டெண் உயர்வுக்குக் காரணமானது.
No comments:
Post a Comment