Monday, January 24, 2011
இந்தியன் வங்கி லாபம் ரூ. 491 கோடி
வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் 14.38 சதவீதம் அதிகரித்து ரூ. 2,640 கோடியானது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ. 2,308 கோடியாகும்.
9 மாதங்களில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,275 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 1,145 கோடியாக இருந்தது. 9 மாதத்தில் வங்கியின் வருமானம் ரூ. 7,677 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 6,713 கோடியாக இருந்தது. இந்தியன் வங்கியின் பங்குகளின் விலை திங்களன்று 5 சதவீதம் அதிகரித்து ரூ. 231.95-க்கு விற்பனையானது.
ஐசிஐசிஐ வங்கி: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 2,039 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட இப்போது 77.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தக் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,149 கோடியாகும்.
ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டின் மொத்த வருமானம் ரூ. 15,415 கோடியாகும். சென்ற நிதியாண்டில் இது ரூ. 14,176.80 கோடியாக இருந்தது. நிகர லாபம் கூடிய நற்செய்தியால், மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கின் விலை ரூ. 18 அதிகரித்து ரூ. 1,083-க்கு விற்பனையானது.
விஜயா வங்கி: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 151.80 கோடியாகும். கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் லாபம் ரூ. 124.50 கோடியாக இருந்தது. இது 22 சதவீத வளர்ச்சியாகும்.
2010 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் விஜயா வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,584.40 கோடியாகும். கடந்த நிதியாண்டின் வருமானம் ரூ.1,447 கோடியைவிட இது 9.46 சதவீத அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் விஜயா வங்கிப் பங்கின் விலை ஒன்றரை சதவீதம் உயர்ந்தது.
யூனியன் வங்கி: வங்கியின் மூன்றாம் காலாண்டு வருமானம் ரூ. 4,693.06 கோடியாகும். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டு வருமானம் ரூ. 3,758 கோடியை விட இதில் 24.87 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
யூனியன் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ. 579.57 கோடியாகும். இதே கால அளவில் கடந்த நிதியாண்டு ஈட்டிய நிகர லாபமான ரூ. 534.13- கோடியை விட இது 8.5 சதவீதம் அதிகமாகும். 2010-11 ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் வரையான 9 மாத காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,484 கோடி.
மணப்புரம் ஜெனரல் ஃபைனான்ஸ்: நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 113 சதவீதம் உயர்ந்து ரூ. 74.53 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 34.99 கோடியாகும். 9 மாத காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 180.86 கோடி. முந்தைய ஆண்டு இது ரூ. 79 கோடியாக இருந்தது. சொத்து நிர்வாக மேலாண்மை காரணமாக லாபம் அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் செயல் தலைவர் வி.பி. நந்தகுமார் தெரிவித்துள்ளார். காலாண்டில் புதிதாக 402 கிளைகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் நிறுவன கிளைகளின் எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. காலாண்டில் புதிதாக 3.25 லட்சம் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10.28 லட்சமாக உயர்ந்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் ஃபோர்ஜ்: கல்யாணி குழுமத்தின் அங்கமான பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 83 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 117 சதவீதம் கூடுதலாகும்.
நிறுவனத்தின் வருமானம் 52 சதவீதம் அதிகரித்து ரூ. 790 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் 80 சதவீதம் உயர்ந்து ரூ. 359 கோடியானது. ஆட்டோமொபைல் அல்லாத பிற துறைகளின் வருமானம் 121 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமரராஜா பேட்டரீஸ்: நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு விற்பனை 16 சதவீதம் அதிகரித்து ரூ. 42.49 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 36.68 கோடியாகும். 9 மாத காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 126.03 கோடியாகும். ஒரு பங்குக்கு ரூ. 2 ஈவுத் தொகை (டிவிடெண்ட்) அளிக்க நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஈவுத் தொகை அளிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Saturday, August 29, 2009
பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம்
மும்பை, ஆக. 28: மும்பை பங்குச் சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தையே சந்தித்தது. தொடர்ந்து 7 நாள்களாக வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால் குறியீட்டெண் 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் தொடர்ந்து 7 நாள்கள் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது கிடையாது.
ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் மும்பை பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 140 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 15,922 புள்ளிகளைத் தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவான 4,700 புள்ளிகளைக் கடந்ததும் குறிப்பிடத்தக்கது. 44 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,732 புள்ளிகளாக உயர்ந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஸ்திரமான முன்னேற்றம் மும்பை பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமானது.
ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
தொடர்ந்து 7 நாள்கள் பங்குச் சந்தை முன்னேற்றம் கண்டதன் மூலம் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது என்பதை உணர்த்தியது. அத்துடன் தொழில்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 7 சதவீதமாக உயர்ந்ததும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை உணர்த்தியுள்ளது.
கட்டுமானத்துறை, ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், சுத்திகரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமான லாபத்தைச் சந்தித்தன. கட்டுமானத் துறை நிறுவனங்களின் பங்குகள் 3.79 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களின் பங்குகள் 1.24 சதவீதமும் உயர்ந்தன. வங்கித் துறை பங்கு விலை 1.12 சதவீதமும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்கு விலை 1.09 சதவீதமும் உயர்ந்தன. அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் விற்பனைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.
மொத்தம் 1,534 நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. 1,249 நிறுவனப் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்தன.
வெள்ளிக்கிழமை மொத்தம் ரூ. 6,581.27 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
Wednesday, August 12, 2009
சரிவிலிருந்து மீண்டது மும்பை பங்குச் சந்தை
மும்பை, ஆக. 11: மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்று நாளாக ஏற்பட்டு வந்த சரிவு செவ்வாய்க்கிழமை மட்டுப்பட்டது. 65 புள்ளிகள் அதிகரித்ததால் குறியீட்டெண் 15,074 புள்ளிகளாக உயர்ந்தது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 33 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,471 புள்ளிகளாக உயர்ந்தது. ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததே புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாகும்.
ஆட்டோமொபைல் பங்குகள் 3.07 சதவீதமும், கட்டுமான நிறுவன பங்குகள் 2.14 சதவீதமும், உலோக நிறுவனப் பங்குகள் 2 சதவீத அளவுக்கு அதிக விலைக்கு விற்பனையாயின. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டது. ஒருகட்டத்தில் குறியீட்டெண் 14,864 புள்ளிகள் வரை கீழிறங்கியது. பின்னர் படிப்படியாக முன்னேறி 15,218 புள்ளிகள் வரை தொட்டது.
பருவ மழை குறைபாடு, வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஆகியன பங்குச் சந்தை முதலீட்டை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன. இருப்பினும் ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சிறிதளவு முன்னேற்றம் பங்குச் சந்தை சரிவை தடுத்து நிறுத்தியது.
ஜூலை மாதத்தில் கார் விற்பனை 31 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை விற்பனை செய்தன. இருப்பினும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 640 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக 6.81 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 3.55 சதவீதமும், ஹிண்டால்கோ 3.38 சதவீதமும், மாருதி சுஸýகி 3.23 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.23 சதவீதமும், டாடா பவர் 1.81 சதவீதமும் உயர்ந்தன.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கு 2.64 சதவீதம் சரிந்தது. எச்டிஎஃப்சி 1.11 சதவீதமும், என்டிபிசி 0.88 சதவீதமும் சரிவைச் சந்தித்தன
Thursday, July 30, 2009
Wednesday, July 29, 2009
Thursday, July 23, 2009
மும்பை பங்குச் சந்தை: 388 புள்ளிகள் உயர்வு 23-8-09 11.45pm
மும்பை, ஜூலை 23: பெரும்பாலான நிறுவனங்கள் முதல் காலாண்டில் லாபம் ஈட்டியதால் வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. இதனால் 388 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 15,231 புள்ளிகளைத் தொட்டது.
தேசிய பங்குச் சந்தையிலும் 124 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,523 புள்ளியாக உயர்ந்தது.
ஆசிய பங்குச் சந்தை மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி லிமிடெட், மாருதி சுஸýகி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததும் பங்குச் சந்தை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். இந்த 5 நிறுவனங்களின் பங்கு விலை உயர்வு 34 சதவீத உயர்வுக்கு வழிவகுத்தது. இதுவரை 11 நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன. இவற்றில் 9 நிறுவனங்களின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே இருந்தது.
கட்டுமான நிறுவனங்களின் பங்குகள் மற்றும் எஃப்எம்சிஜி எனப்படும் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைககளும் கணிசமாக உயர்ந்தன.
சென்செக்ஸில் 420 புள்ளிகள் உயர்வு: முன்கூட்டியே நிறுத்தப்பட்ட பங்கு வர்த்தகம்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 420 புள்ளிகள் உயர்ந்தன. எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிகமான பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் இன்று முன்கூட்டியே பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு லாப அறிக்கைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே நல்ல லாபம் ஈட்டியுள்ளன. இதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள்.
இதனால் பல்வேறு துறைப் பங்குகளுக்கும் அதிக தேவை ஏற்பட்டது இன்றைய வர்த்தகத்தில். எனவே பங்குச் சந்தையில் வழக்கத்தைவிட முன்னதாகவே வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
சென்செக்ஸில் இன்று 420 புள்ளிகள் உயர்ந்தன. நிப்டியில் 129 புள்ளிகள் உயர்ந்தன.
ஹாங்காங் உள்ளிட்ட இதர ஆசிய சந்தைகளிலும் பங்கு வர்த்தம் இன்று உச்ச நிலையில் இருந்தது.
பங்குச் சந்தையில் தொடரும் சரிவு
மும்பை, ஜூலை 22: பங்குச் சந்தையில் சரிவு மீண்டும் ஆரம்பமானது. புதன்கிழமை 219 புள்ளிகள் வீழ்ந்ததில் குறியீட்டெண் 14,843 புள்ளிகளாகக் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் 70 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 4,557 ஆனது.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோது பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் 307 புள்ளிகள் வரை உயர்ந்த வர்த்தகம் பின்னர் சரிவடையத் தொடங்கியது.
பிஎச்இஎல் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் லாபம் உள்ளிட்ட செய்திகள் சரிவைத் தடுக்கப் போதுமானதாக அமையவில்லை.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பிற்பகலில் மும்பை பங்குச் சந்தையைக் கடுமையாக பாதித்ததால் சரிவை தவிர்க்க முடியவில்லை.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மிக அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததும் சரிவுக்குப் பிரதான காரணமாக அமைந்தது. இந்நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 250.86 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 1.87 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளும், மின்துறை பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் 1.60 சதவீதம் சரிந்தது. டாடா கன்சல்டன்ஸி நிறுவனப் பங்குகள் 2.42 சதவீதம் குறைந்து ரூ. 465.85-க்கு விற்பனையானது. இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை 1.23 சதவீதம் குறைந்து ரூ. 1,919.20-க்கு விற்பனையானது.
மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 1.30 சதவீதம் சரிந்தது. வங்கித் துறை பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. ஐசிஐசிஐ வங்கி பங்கு 1.44 சதவீதம் சரிவைச் சந்தித்தது. எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான சரிவைச் சந்தித்தன.
Monday, July 20, 2009
15 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது பங்குச் சந்தை
மும்பை, ஜூலை 20: மும்பை பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 15 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஐந்து வாரங்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
திங்கள்கிழமை வர்த்தகம் முடிவில் 446 புள்ளிகள் உயர்ந்ததைத் தொடர்ந்து குறியீட்டெண் 15,191 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 2.7 சதவீதம் குறியீட்டெண் உயர்ந்து 4,494 புள்ளிகளாக அதிகரித்தது.
ஓய்வூதியம், வங்கித்துறை சீர்திருத்தம் உள்பட 7 மசோதாக்கள் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை நிதித்துறைச் செயலர் அசோக் சாவ்லா கூறியதால் பங்குச் சந்தையில் 495 புள்ளிகள் உயர்ந்தது.
திங்கள்கிழமை அமெரிக்காவின் சிட்டி குழுமத்துக்கு தேவையான நிதி உதவியை அளிக்கப்போவதாக அமெரிக்க அரசு வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர்ந்தன.
ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இடையே எரிவாயு வழங்குவதில் நிலவும் பிரச்னையில் அரசு ஏன் தலையிடக் கூடாது என்றும் இந்த உத்தரவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் (கேஜி) எடுக்கப்படும் இயற்கை எரிவாயு அரசுக்குச் சொந்தமானது என்றாலும், இரு தனியார் நிறுவனங்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அரசு தலையிட முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அரசின் நிலையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தால் சந்தை விலைப்படிதான் எரிவாயுவை அனில் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டியிருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சாதகமான சூழலே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவியது.
இதனால் அந்நிறுவனப் பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்து ரூ. 2030.65-க்கு விற்பனையானது.
அதேசமயம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனப் பங்கு விலை 2.7 சதவீதம் சரிந்து ரூ. 80.75-க்கு விற்பனையானது. இதேபோல அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்கு 1.2 சதவீதம் சரிந்து ரூ. 1,135.85-க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.1 சதவீதம் சரிந்து ரூ. 270-க்கும் விற்பனையானது.
வங்கிகளின் பங்கு விலைகள் கணிசமாக அதிகரித்தது. இதேபோல தகவல் தொழில்நுட்ப பங்கு விலைகளின் உயர்வும் பங்குச் சந்தை குறியீட்டெண் உயர்வுக்குக் காரணமானது.